தமிழ்சினிமா தொடக்கத்தில் சரியாகத்தான் இருந்தது, 1950கள் வரை அதனால் நாட்டில் சிக்கல் இல்லை. அதுவரை இந்து புராணங்களும் இந்துக்களின் இதிகாசங்களுமே நாடகமும் சினிமாக்களாகவும் வந்து கொண்டிருந்தது
தியாகராஜ பாகவதர் காலம் முடிந்து அது வசன உலகுக்கு மாறிய காலங்களில் அந்த பலமான ஊடகம் இந்து எதிரிகளாலும் இந்திய எதிரிகளாலும் மறைமுகமாக வளைக்கபட்டது
தமிழக மக்கள் அறியாமலே அதில் ஒருவித மயக்கமருந்து செலுத்தபட்டது, மெல்ல மெல்ல சினிமா தமிழகத்தில் விஷத்தை செலுத்தியது
அதில் தேசபக்தி மங்கிற்று, இந்து பாரம்பரியமும் பெருமையும் சீரழிக்கபட்டது, இன்று அது அப்பட்டமாக தெரிந்தாலும் அன்று மங்கா அடையாளங்களும் அன்று இந்து தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒருசிலரால் தமிழும் இந்துமதமும் அங்கு மின்னியது
அவர்களால்தான் என்றும் அழியாத அழகுதமிழ் பாடல்களும் பக்தி பாடல்களும் இந்து அடையாள சினிம காட்சிகளும் தமிழகத்துக்கு கிடைத்தன
அதில் கேபி சுந்தராம்பாள், கண்ணதாசன், சீர்காழி, எம்.எஸ் விஸ்வநாதன், இயக்குநார் ஏபி நாகராஜன், சிவாஜி கணேசன், இளையராஜா என ஒரு தனி கூட்டம் உண்டு, இவர்கள் தங்கள் கலைவடிவில் தேசியத்தையும் இந்துமதத்தையும் தாங்கினார்கள்
இன்றைய திரை கூட்ட இம்சைகளையும் அன்றைய கூட்டத்தையும் கவனியுங்கள் உங்களுக்கே உண்மை புரியும்
இன்றைய சினிமாவில் இசை அமைப்பாளர், பாடகர், கவிஞர், நடிகர் , கதாசிரியர் என எல்லோரும் இந்து பாரம்பரியம் அல்லாத, இந்து அடையாளமற்றவர்களாய் குவிந்து கிடக்கின்றார்கள் ஒன்றும் உருப்படியில்லை
அதனாலேதான் நாட்டுபற்று பாடலோ, படமோ, கதையோ இயக்கமோ இப்பொழுது இல்லை, எல்லாம் வெறும் வறட்டு கூச்சல், முழு அரைவேக்காட்டுதனம் இன்னும் ஏராளம் முழுக்க இம்சைகள்
ஆனால் அக்காலம் அப்படி அல்ல, பக்தியும் தமிழும் தேசபற்றும் பாரம்பரியமும் கொண்ட கலைஞர்கள் இருந்தார்கள் அவர்களில் ஒருவர் வாலி.
வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர்
ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார்
திருவரங்கத்து ஞானமிக்க அறிவு சுஜாதா போலவே இவருக்கும் இயல்பான அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள்.
ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம்
நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு, பெருக்கெடுத்தோடும் கற்பனை என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், அவர் வந்த காலம் போட்டிமிக்கது
உடுமலை நாராயணகவி, பெரும் கவிஞன் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் என பெரும் ஜாம்பவான்கள் இருந்தகாலத்தில் நுழையமுயன்றார்
அக்காலம் அவருக்கு கைகூடவில்லை, மெதுவாகத்தான் நுழைந்தார், 1958ல் அவர் நுழைந்திருந்தாலும் 1963ல்தான் அவருக்கான அடையாளம் கிடைத்தது, கற்பகம் படத்தில் அற்புதமாக எழுதியிருந்தார்
பிறவியிலே கடும்போக்கு வைஷ்ணவரான அவர் முருகனை பாட ஆரம்பித்தபின்பேதான் வாழ்வும் வாசலும் திறந்தது என அவரே சொன்னதில் தெரிகின்றது அவருக்கும் தமிழுக்குமான பூர்வஜென்ம தொடர்பு
ஆம், அவருக்கும் தமிழ்குக்கும் தமிழ்கடவுளுக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருந்தது அதுதான் அவரை உரிய காலத்தில் கவிஞனாக்கிற்று
அதன் பின்னும் போராடினார், நிச்சயமாக வாலி அபார திறமைக்காரர், ஆனால் கண்ணதாசனில் செங்கோல் ஆட்சிமுன் அவரால் பெயரிட முடியவில்லை, கண்ணதாசனின் வீச்சு அப்படி இருந்தது
அவர் கப்பலோட்டிய காலத்திலே ஓரமாக படகோட்டி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைபடுத்தியவர்
வாலி, கண்ணதாசனோடு போட்டிபோட்டு வளர்வது சாதாரணம் அல்ல,வாலி அதனை செய்தார்
ஆலமர அடியில் இன்னொரு மரம் வளரமுடியாது மீறி வளர்வது என்பது மிகபெரிய சாதனை
ஒரு கட்டத்தில் கண்ணதாசனுக்கு ஈடாக எழுதிவந்தார், எது வாலிபாடல் எது கண்ணதாசன் பாடல் என தெரியாத அளவிற்கு தமிழகம் திணறியது
அற்புதமான பாடல்களை கொடுத்த அவரை மறக்க முடியாது, கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களை எழுதினார், இனி எந்த கவிஞனும் தொடமுடியா உயரம் அது
கடவுள் முதல் கல்லறை வரை அத்தனையினையும் வித்தியாசமான அழகு தமிழில் மிக சுருக்கமாக எழுதியதுதான் அவரின் ஆற்றல்
கிட்டதட்ட 5 தலைமுறை நடிகர்களுக்கு எழுதினார் என்றால் எவ்வளவு நீண்ட ஓட்டம்? எம்ஜிஆர் காலம் முதல் சிவகார்த்திகேயன் காலம் வரை எழுதிகொண்டே இருப்பது என்பது எவ்வளவு பெரும் சாதனை?
அந்த நல்வரம் வாங்கி வந்தவர் வாலி
கண்ணதாசனுக்கு ஆயுளும் குறைவு, அவருக்கே உரித்தான குணங்களால் அவர் எழுதியதும் குறைவே
பட்டுகோட்டைக்கு ஆயுள் இல்லை, மிக குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர் அவர்
தமிழுலகம் ஒரு சில திறமைசாலிகளையே முழு ஆயுளுக்கும் பயன்படுத்தும், அப்படி இங்கு நீண்டகாலம் தன் வரிகளால் மக்களை கட்டி போட்டவர் வாலி
தஞ்சை கோவிலை தாண்டியும் புகழ்பெற்ற ஆலயங்கள் சோழநாட்டில் உன்டு என்பது போல கண்ணதாசனை தாண்டியும் புகழ்பெற்று நின்றவர் வாலி
தன் அழகு தமிழில் முருகனுக்கு அவர் பாடிய பாடல்களெல்லாம் அருணகிரிநாதர் பாடல் போல் உருக்கமான பாடல்களெல்லாம் தமிழ் பக்தி பாடல்களின் தனி வரம்
கேவி மகாதேவன் காலத்தில் தொடங்கிய அவரின் பாடல்கள் ரகுமான் காலம்தாண்டி அனிருத் காலம் வரை வந்தது
எல்லா தலைமுறைக்கும் சளைக்காமல் ஈடுகொடுத்து எழுதினார் வாலி
வாலிபற்றி பேசினால் பேசிகொண்டே இருக்கலாம், அப்படிபட்ட கவிஞர் அவர். அவர் எழுதிய 13 புத்தகங்களும் அப்படி மிக மிக ரசனையானவை
பாடல்களில் எத்தனை தலைமுறைக்கு எழுதினாலும் ஒரு தலைமுறைக்கு எழுதிய பாதிப்பு அடுத்த தலைமுறைக்கு வராது
எம்ஜிஆர் காலத்தில் கடலோரம் வாங்கிய காற்று என்றும் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் என்றும், படகோட்டி படத்தில் தரைமேல் பிறக்க வைத்தான் என்றும் பாடிய வாலி பின்பு கடலுக்கு பிஷ் நெட்டு, காதலுக்கு இன்டர்நெட்டு எனவும் பாட தயங்கவில்லை
கண்ணதாசன் தன் காலத்தில் “பசுமை நிறைந்த நினைவுகளே” என கொடுத்தால் வாலியால் பிற்காலத்தில் முஸ்தபா முஸ்தபா கொடுக்க முடிந்தது.
எல்லா தலைமுறை ரசிபப்தை தானும் ரசித்தாலொழிய இவையெல்லாம் சாத்தியமில்லை, அதனால்தான் திருலோக சுந்தர் முதல் பாலசந்தர், ஷங்கர் வரை அவரால் ஒட்டமுடிந்தது
இப்பொழுதும் அவரின் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பதில் தொடங்கி “முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா” வரை அவரின் பக்தி பாடல்கள் தனி கிளாகிக்
கம்பன் பாடாமல் போன கிருஷ்ண பக்தியினை கண்ணதாசன் பாடினான், அவன் பாடாத மிச்சத்தை நமக்கு அழகுதமிழில் தந்தவன் வாலி
அவரின் “கிருஷ்ண காவியம்” காலத்துக்கு ஏற்ற கம்பராமாயணம் என்றால் அது மிகையல்ல, அவ்வளவு அழகான காவியம் அது
வாலிமேல் எந்த அளவு மரியாதையினை தமிழகமும் இந்துக்களும் கொடுத்தார்களோ அதே அளவு வெறுப்பையும் அவர் கருணாநிதியின் மேடைகளில் சம்பாதித்தார்
துக்ளக் சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் போல தனித்து நிற்க அவர் யோசித்தார், கவிஞனின் வாழ்வு இரந்து பிழைப்பது என்பதை மனமார நம்பினார்
கருணாநிதியின் கவியரங்கம் முதல் பல இடங்களில் தோன்றினார், கருணாநிதியினை வாயார பாடினார்
அதெல்லாம் அவரின் மரியாதையினை குலைத்தபொழுதும் அவரின் தொழில் அது என்பதில் சரியாக இருந்தார்
பக்தி வேறு தொழில் வேறு என்பதில் அவர் சரியான நிலைப்பாட்டில் இருந்தார், அவரின் கொள்கை பாடுவது ஒன்றே என்றானது
எதை கொடுத்தாலும் பாடினார், அதற்கு கருணாநிதி எனும் பெயரும் விதிவிலக்கு அல்ல
அவர் தன்னிலை விளக்கத்தை பல இடங்களில் கொடுத்தார், அதை ஒரு சில இடங்களில் தெளிவாக சொன்னார்
சமைஞ்சது எப்படி போன்ற பாடல்கள் சர்ச்சையாகும் பொழுது, மேடைகளில் அருமையான கவிமழை பொழியும் நீங்கள் இப்படி எழுதலாமா என கேட்டபொழுது சொன்னார்
“அங்கு நான் தமிழை தாலாட்டும் தாய்
சினிமாவில் எலும்புக்கு வாலாட்டும் நாய்”
இதனை விட சினிமா கவிஞனின் கொடுமையான வாழ்க்கையினை சொல்லமுடியாது, தான் எலும்புக்கு வாலாட்டும் நாய் என அவரே பகிரங்கமாக ஒப்புகொண்டபின் சொல்ல ஒன்றுமில்லை
ஆனால் அவரின் முருகன் பாடல்களும், பக்தி பாடல்களும் எக்காலமும் இங்கு தனி இடம் பெற்றிருக்கும் அவ்வகையில் ராமாயண வாலி போல அழியா இடம் பெற்றவர் இந்த கவிஞர் வாலி
தன்னைபற்றி வாலிஎழுதவில்லை என்பார்கள், தசதவாரம் பாடலில் ஒருவரியில் மிக அழகாக தன்னையும் சொல்வார்
“நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”
அந்த திருவரங்க ரங்கராஜன் தமிழ் எழுத தன் தனிபெரும் அருளாளனை அனுப்பிவைத்தான் , அந்த ரங்கராஜன் பின்னாளில் வாலியாக அறியப்பட நினைவு நாள் இன்று
அவர் காசுக்காக எழுதிய சினிமா பாடல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் அவர் தன் மனதின் நிம்மதிக்காக எழுதிய இந்துபாடல்களும் எழுத்தும் அபாரமானவை.அவ்வகையில் அவர் ஒரு ஆழ்வாரின் சாயல், அது எக்காலமும் உண்மை
அவர் பாடலில் ஆழ்வார்களின் பக்தி இருந்தது, ஆண்டாளின் காதல் இருந்தது, நம்மாழ்வாரின் தத்துவம் இருந்தது எல்லா வைஷ்ணவ பக்கங்களும் அவர் எழுதிய பிரசித்தியான பாடலின் ஓரு இடத்திலாவது இல்லாமல் இருந்ததில்லை
கண்ணனுக்கும் முருகனுக்கும் அழியாபாடல் கொடுத்த ஒரே காரணத்துகாக அவருக்கு தமிழக இந்து மக்கள் அஞ்சலி செலுத்தத்தான் வெண்டும், பல தேசபக்தி பாடல்கள் எழுதியதற்காக இந்தியராக அவருக்கு புகழாஞ்சலி
திருச்சி திருவரங்கநாதனை நினைக்கும் போதெல்லாம் “ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” என்ற அந்த வாலியின் வரிகள் ஆடிமாத காவேரி போல் நெஞ்சில் மோதும், அப்படியே திருசெந்தூருக்கு சென்றால் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” எனும் வரி கடலலையாய் மோதும்,அந்த வாலி ஒரு காலமும் மறக்கமுடியா மாபெரும் தெய்வீக கவிஞன்
காளமேக புலவருக்கு திருவானைக்காய் அகிலாண்டேஸ்வரி கொடுத்த வர்மபோல, ரங்கநாதனிடம் வரம்பெற்று வந்தவன் அந்த கவிஞன் இல்லையேல் அப்படியான வார்த்தைகளும் அவற்றின் ஆழமும் சாத்தியமே இல்லை.

