கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் நந்தி ராஜன். இவர் மக்கள் குறைதீர்வு முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் 16A அரசு பேருந்து இயக்கிட கோரிக்கை மனு அளித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிட் திருப்பத்தூர் கிளை பணிமனை சார்ந்த 16A அரசு பேருந்தானது தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மதியம் சுமார் 4 மணி நேரமாக வழிதடத்தில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில மாதங்களாகவே பர்கூர் அரசினர் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு போதுமான அளவில் மதிய நேரத்தில் அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தினால் ஷேர் ஆட்டோகளில் பர்கூர் நகருக்கும் வெலக்கல்நத்தம் வழித்தடத்தில் செல்லும் பகுதிக்கும் சென்று வருகின்றனர்.
இதனால் சில மாதங்களுக்கு முன்பு கூட அரசு பேருந்து இல்லாத காரணத்தினால் ஷேர் ஆட்டோவில் சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி இறந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு பிப்ரவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள 16A அரசு பேருந்தை மதியம் நேரத்தில் திருப்பத்தூர் பணியாண்டப்பள்ளி வெலக்கல்நத்தம் வழியாக பர்கூர் நகர் வரைக்கும் இயக்கி மீண்டும் அதே வழித்தடத்தில் திருப்பத்தூர் நகருக்கு இயக்கிட பொதுமக்கள் சார்பில் திருப்பத்தூர் பணிமனை கிளை மேலாளரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஆனால் மனு அளித்து கடந்த 6 மாதங்களான நிலையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் துறை அதிகாரிகள் மெத்தன போக்கு காட்டி வந்ததாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருப்பத்தூர் வெலக்கல் நத்தம் வழியாக பர்கூர் நகருக்கு அரசு பேருந்து இயக்கிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய துறை அலுவலர்களை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய காலத்திற்குள் பொதுமக்கள் கூறும் வழிதடத்தில் அரசு பேருந்து இயக்கிட உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் நந்தகுமார் மற்றும் பெருமாள் உடன் இருந்தனர்.

