Site icon Nangooram

10 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த கயவனை, கைது செய்யாதது ஏன்?தலித் உரிமை பாதுகாப்புக் கழகம் கடும் கண்டனம்!

தற்போதைய காட்சிகள் அனைத்தும் ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்பதை காட்டுகிறது…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செஞ்சியம்மன் நகரை சேர்ந்த பட்டியலின பழங்குடி வகுப்பை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த 12-ஆம் தேதி பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு 12:30 மணி அளவில் நடந்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை 12:53 மணிக்கு கடந்து மாந்தோப்புகளின் நடுவில் உள்ள பாதை வழியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் மாந்தோப்பிற்குள் சிறுமியை தூக்கிச் சென்று சீரழித்த அவலம் அரங்கேறியுள்ளது.
அதன் பின்னர் அந்த நபர் அவருடைய நண்பர் ஒருவருக்கு இந்தியில் செல்போனில் பேசியுள்ளார்.

அந்நேரத்தில் சிறுமி சுதாரித்துக் கொண்டு தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆரப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்துள்ளனர்.

பின்னர் சிறுமிக்கு காயம் இருந்ததால் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

அதன் பின்னர் மேலும், சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றபோது அங்கு டிஎஸ்பி 8 வயது சிறுமியிடம் பெற்றோரை வெளியே நிற்க வைத்து விட்டு தனியாக விசாரணை மேற்கொண்டு அதனை பதிவு செய்துள்ளார்.

அதன் பின் சிறுமி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சிறுமிக்கு அதிக உதிரப்போக்கு இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆர் எஸ் ஆர் எம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.காவல்துறை, கோட்டக்கரை மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

10 வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.குற்றம் நடந்து 6 நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி யார் என்பது தெரியவில்லை என்பது அரசின் அலட்சியத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்த காவல் அதிகாரிகள், சிகிச்சைக்கு சென்று சிகிச்சை கொடுக்காமல் புறக்கணித்த கோட்டக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மீது அரசு உடனடியாக பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதிகாரிகள் அலட்சியப் போக்கு தடுக்கப்படும், ஏழைகளுக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்யும்.

தற்போதைய காட்சிகள் அனைத்தும் ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்பதை காட்டுகிறது.

ஆளைச் சொல் சட்டத்தை சொல்கிறேன் என்றில்லாமல், சட்டம் அனைவருக்கும் சமம் என்கிற அடிப்படையில் ஏழை பழங்குடியின 10 வயது சிறுமிக்கு நீதி கிடைத்திட உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Customize Text: Font Color:
Exit mobile version