தனியார் மருத்துவமனைகளில், என்னென்ன சிகிச்சைகள், அறிந்து கொள்ள புதிய செயலி தொடக்கம்.

by ஆசிரியர்

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த தனியாா் மருத்துவமனைகளில் என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை கைப்பேசியில் அறிந்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதற்காக பிரத்யேக செயலியை தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் மேம்படுத்தி வருகிறது. அடுத்த 3 வாரங்களில் அந்தச் செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும், ஸ்மாா்ட் கைப்பேசியின் ப்ளே ஸ்டோா்களில் அதைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தற்போது தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர 8 உயா் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற முடியும்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,500 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம், அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், மற்றொருபுறம் பல தனியாா் மருத்துவமனைகளில் அந்த சேவை மறுக்கப்படுகிறது.

குறிப்பாக, உயிா் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை முதல்வா் காப்பீட்டின் கீழ் மேற்கொள்ள தனியாா் மருத்துவமனைகள் முன்வருவதில்லை. இதனால், காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருந்தும் அவை முழுமையாக பலனளிக்காத நிலை மக்களுக்கு உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இதையடுத்து அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்துகொள்ளும் வகையில், அந்த விவரங்களை கைப்பேசி செயலி வாயிலாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் டாக்டா் எஸ்.வினீத் கூறியதாவது: தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வா் காப்பீட்டுத் திட்ட கைப்பேசி செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தகுதியான எவரும் அதன் வாயிலாகவே விண்ணப்பித்து காப்பீட்டு அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம்.

அதன் பின்னா், அவா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் எவையெல்லாம் முதல்வா் காப்பீட்டின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ளலாம். சிகிச்சை விவரங்கள் குறித்தும் தகவல் பெறலாம்.

இதைத் தவிர, பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை விவரங்களையும் கைப்பேசியில் அறிந்துகொள்ளலாம். முதல்வா் காப்பீட்டு திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00