கொடிய பாவ தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ராமேஸ்வரம் பாதாள பைரவர்!
ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய கோடி தீர்த்தம் அமைந்துள்ளது.
இராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.
ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.
வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும்.
ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
அந்த தோஷம் எங்கு செல்வது என தெரியாமல் திணறியது.
ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு
பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார்.
பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.
பின்னர் இத்தலத்திலேயே பைரவர் அமர்ந்து விட்டார். இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.
இதனால் இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர்.
இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது
இந்த பாதாள பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக உள்ளது.