கவலை போக்கும் கந்த சஷ்டி கவசமும்! அதில் மறைந்துள்ள அறிவியல் உண்மையும்!

by ஆசிரியர்

கந்த சஷ்டி கவசம் என்பது முருக பக்தர்களுக்கான பாதுகாப்புக் கவசமும், ஆன்மீக ஆற்றலும், உடல் மன நலத்துக்கான பலன்களும் கொண்ட பாடல்.முருகன் பாடல்களில் இது உயர்ந்த இடம் பெற்றது.

முருகனின் பக்தரான பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்

கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு மரணித்து விடலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சி அளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல, உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும், அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என முருகக் கடவுள் சொல்கின்றார்.

அந்த இடத்தில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும் நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.

சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு.நோய், பில்லி, சூன்யம், வறுமை, வம்ச விருத்தி, சிக்கல், மனநலம், தீராக் கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தனின் மக்களை காக்கும் பாடலாக அது உருவெடுத்தது.

நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது.ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது.

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!

கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க!

விதிசெவியிரண்டும் வேலவர் காக்க!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!

முப்பத்திரு பல் முனைவேல் காக்க!

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க!

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க!

மார்பை ரத்தின வடிவேல் காக்க!

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல் தேடும் பாடல் அது.இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது.ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும் பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரியாகும் என்கின்றது அறிவியல்.

உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது.உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது.தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும்,உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌.

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்.

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்.உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்.

ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்.ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே.
அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால் தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்.

குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்.முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்.

முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்.
வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்.நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்கூடாக கண்டதே.இதைத் தான் பாடலாக சொன்னார்கள்.

முருகனைக் கூப்பிட்டு, முறையிட்ட பேருக்கு,
முற்றிய வினை தீருமே!

உடல் பற்றிய பிணி ஆறுமே!

வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே..

எனவே, உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம் என்பதற்கு இணங்க, இறைவன் குடி கொண்டுள்ள இந்த உடலினை காக்கும் மருத்துவ மந்திரங்கள் நிறைந்த முருக பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை நாமும் பாடி மகிழ்ந்து கந்தனின் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ்வோமாக!!.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00